Saturday, November 27, 2010

நந்தலாலா - Nandalala

நடிகர்கள்
மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம், ரோஹினி, நாசர்
இசை
இளையராஜா
இயக்கம்
மிஷ்கின்
தயாரிப்பு
சி.அருண்பாண்டியன், கே.கருணாமூர்த்தி


Tamil Movie - Nandalala Review - Master Ashwath Ram, Mishkin, Nasser, Rohini, Snigdha, Mahesh Muthusamy, Mishkin, Mishkin, Illayaraja, C. Arun Pandiyan, Karunamoorthy, Mishkin, Mishkin, Action Prakash,  Tamil Movie Actor, Actress


தன் தாயைத் தேடி மனநோயாளி ஒருவனும், எட்டு வயது சிறுவனும் செல்வதுதான் கதை.
பெரிய நட்சத்திரப் பட்டாளம், நாலு பைட், 2-3 கோடிக்கு பாடலுக்கு செட், பஞ்ச் டயலாக் என்பது தமிழ் சினிமாவில் ஹிட் பார்முலா. மறுபக்கம் இயல்பான கதைகள் கமர்சியலுக்குதவாது என்று அவார்டுகளை குறிவைத்து ஆர்ட் பிலிம்களை இயக்குவதுதான் வழக்கம். யதார்த்தக் கதைகள், இயல்பான சம்பவங்கள், நேட்டிவிட்டியாகப் படமெடுத்து அதை கமர்சியலாகவும் வெற்றி பெறச் செய்ய முடியும் என்று நிரூபித்துக் காட்டிய இளைய தலைமுறை இயக்குநர்களில் மிஷ்கின் முக்கியமானவர். மிஷ்கினின் 'நந்தலாலா'வும் இந்த வகையை சார்ந்ததே.
அன்னவாசல் என்னும் ஊரில் இருந்துக் கொண்டு மாதந்தோறும் லெட்டரையும், பணத்தையும் அனுப்பி வைக்கும் தனது அம்மாவைத் தேடிப் புறப்படுகிறான் சிறுவன் அஸ்வத். சிறிதளவு மனநலம் பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிக்கியிருக்கும் ஒரு நோயாளி மிஷ்கின். எல்லாரையும் பார்க்கவும், நேசிக்கவும், சோறு ஊட்டவும் அம்மாவும், அப்பாவும் வரும்போது, தன்னைப் பார்க்க யாரும் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கேரக்டர்.. ஒரு நாள் மருத்துவமனையைவிட்டு வெளியேறுகிறான்.

அதே நாள்தான் அந்தச் சிறுவனும் தனது தாயைத் தேடி அன்னவாசல் நோக்கிப் புறப்படுகிறான். இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். முதலில் முரண்படுகிறார்கள். பின்பு இணைகிறார்கள். இருவருக்குமே அவரவர் தாயைச் சந்திக்கும் ஆவல்.. சிறுவனுக்கோ தனது தாயைச் சந்தித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. இதனாலேயே யாரிடமும் முத்தம் பெறாமல் தவிர்த்து வருகிறான். இந்தப் பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்கள், பிரச்சினைகள், எதிர்ப்புகள்.. என்று பலவற்றையும் சந்திக்கிறார்கள். அந்தச் சூழலுடன் கதையை நகர்த்தி, இறுதியில் சிறுவன் தாயை சந்தித்தானா? மனநலம் பாதித்தவனும் தனது அம்மாவைப் பார்த்தானா? என்பது நெகிழ வைக்கும் இறுதிக்காட்சி.
நடிப்பு, இயக்கம் என படம் முழுவதும் 'மிஷ்கின்' முத்திரை பதித்திருக்கிறார். மிஷ்கின் நடிப்பதாகவேத் தோன்றவில்லை, உண்மையான மன நோயாளியை நம் கண்முன் நிறுத்துகிறார். குழந்தைத்தனத்துடன் இருப்பது, பேசுவது, அஸ்வத்தை பின்பற்றுவது, துணையாக நிற்பது, தனது 'பேண்டை' தூக்கிக்கொண்டு நடை போடுவது என ஒவ்வொரு காட்சியிலும் கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, நம் மனதில் பதிகிறார்.
லாரியின் ஹாரனைத் திருடியதால் லாரிக்காரன் மிஷ்கினை போட்டு புரட்டியெடுக்கும்போது மனம் பிறழ்ந்தவன் மிஷ்கின் என்பதை உணர்ந்த நொடியில் லாரிக்காரன் ஸ்தம்பித்துப் போகும் காட்சி.! ஸ்னிக்தாவின் கதையைக் கேட்டு நால்வரும் திறந்த வாய் மூடாமல் திகைப்புடன் இருக்கும் காட்சி.. சிறுவனின் அம்மா எங்கே என்று கேட்டவுடன் 'வரேன்டி சிறுக்கி முண்டை..' என்று திட்டியபடியே தனது அம்மாவைத் தேடி வெக்கு, வெக்கென்று நடக்கும் காட்சி என்று இந்தப் படத்தில் இன்னும் சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு கேமிரா மூலமும் நம் மனதைக் கொள்ளை கொண்டிருக்கிறார் மிஷ்கின்.
தனது அம்மாவைப் பார்த்தவுடன் கதறி அழும் காட்சியும் அந்தப் பாடல் காட்சியுடன் தாயை மனநலம் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு கிளம்பும்போது காட்டுகின்ற வெறி.. போகாதே என்பதைப் போல் அப்போது மட்டும் ஆக்ஷனைக் காட்டும் அம்மா ரோஹினி.. என்று எங்குமே ஓவர் ஆக்ட் இல்லை.. அத்தனையும் ஒருவித சுய கட்டுப்பாட்டுக்குள்தான் கொண்டுப் போயிருக்கிறார்..!
இறுதிக் காட்சியில் பையனிடம் இதற்கு மேலும் பொய் சொல்ல முடியாமல் அவன் அம்மாவைப் பற்றிச் சொல்ல அவன் பதிலுக்கு 'மென்ட்டல்' என்று சொல்லிவிட.. மிஷ்கின் கோபத்தில் துடிக்கும்போது பையன் சொல்கின்ற பதில் அட்டகாசம்..
"எனக்கும் இப்படித்தான இருந்திருக்கும்.. இதோ இவங்களைச் சொல்லலாம்ல.. இவங்கதான் அம்மான்னு சொல்லிருக்கலாம்ல.. நான் முத்தமாவது கொடுத்திருப்பேன்ல.." என்று சொல்லும்போது அந்தப் பையனை வாரியணைக்க வேண்டும்போல இருக்கிறது..! தாயின் ஒரு முத்தத்திற்காக இத்தனை அல்லல்பட்டு, துன்பத்தில் இருக்கும் அந்தச் சிறுவனுக்கு வேறென்ன செய்ய முடியும்..!
அஸ்வத் ராம் தமிழ் சினிமாவின் தர்ஷில் சஃபாரி (தாரே ஜமீன் பரில் மனதைக் கவர்ந்த துள்ளல் சிறுவன்), அவரது புத்திசாலித்தனமும், அழகானத் தோற்றமும் நம்மை கவர்கிறது. 'தாயை எண்ணி ஏங்கும் நேரங்களில், அஸ்வத்தை தாங்களே எடுத்து வளர்க்க வேண்டும்' என படம் பார்க்கும் பெண்களுக்கு நிச்சயம் தோன்றும்.
விபச்சாரப் பெண்ணாக கடைசிப் பகுதியில் வரும் 'ஸ்னிக்தா'விற்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் படத்தை மகிழ்ச்சியாக முடிக்க அவர் தேவைப்படுகிறார். பனிரெண்டு நொடிகளே வருகின்ற போதிலும் நாசர், ரசிகர்களின் கைத்தட்டலைப் பெறுகிறார்.
படம் இறுதிவரையிலும் மெல்லிய சோகத்துடன்தான் இழையாடுகிறது.. இதற்குப் பக்க பலம் இசைஞானி இளையராஜா.. இங்கே ஒரு இசை ராஜ்ஜியத்தையே செய்துக் காட்டியிருக்கிறார்.
மிஷ்கினின் அறிமுகக் காட்சியில் துவங்கும் இளையராஜாவின் பின்னணி இசை, படத்தின் இறுதிவரையில் அவரும் ஒரு கேரக்டர் என்பதைப் போல் தனது சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கிறார். இனி பின்னணி இசையின் உதாரணத்துக்கு இந்தப் படத்தை நிச்சயமாக, தைரியமாகக் குறிப்பிட்டுப் பேசலாம். ராஜா ராஜாதான்..! அடுத்த வருட தேசிய விருது ராஜாவுக்கு நிச்சயம்..!
அடுத்து ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. ஒரே இடத்தில் கேமராவை நிறுத்தி வைத்து கேரக்டர்களை நகரவிட்டு எடுத்ததும், கேரக்டரும், கேமராவும் அசையாமல் ஸ்டில் போட்டோவைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதும், கேரக்டர்கள் நகரும்போது அவர்கள் முன்னும், பின்னும், டாப், மட்டும் லோ வைட் ஆங்கிளிலும் நம்மை கதையோடும், கேரக்டர்களோடும் ஒன்றச்செய்வதும் மகேஷ் முத்துசாமி அவர்களைத் தோளில் தூக்கி வைத்துப் பாராட்ட வேண்டும் எனத் தோன்றுகிறது. அதேபோல் டிராட்ஸ்கி மருதுவின் கண்களை ஏமாற்றும் கலைவடிவம், தேர்ந்த எடிட்டிங் என எங்கும் குறை சொல்ல முடியாத உழைப்பு.
குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது. ஓரிரு காட்சிகள், முக்கியமாய் ஷாட் ப்யூட்டிக்காகவே ரொம்ப நேரம் நின்றுக் கொண்டேயிருப்பது, நீளமான ஸ்டாண்ட் ஸ்டில் காட்சிகள். அது உணர்த்தும் விஷயங்கள் நிறைய. சில அழுகைக் காட்சிகள், க்ளைமாக்ஸ் முடிந்து வரும் காட்சி போன்றவைகளை சொல்லலாம்.
'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' படங்களில் ரசிகர்களைக் கவருகின்ற விதத்தில் அவர்களுக்குப் பிடித்தமான காதல் சப்ஜெக்ட்டையும் தொட்டு அதை வைத்துத்தான் தனது இயக்கத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் மிஷ்கின். இது முன் வரிசை டிக்கெட்டுகளையும் கவர்ந்தது..! அதனால்தான் அந்த இரண்டுப் படங்களும் பி மற்றும் சி சென்டரில்கூட ஓடின..
ஆனால் இந்தப் படத்தில் எந்தவித சமரசத்தையும் வைத்துக் கொள்ளாமல் பாடல் காட்சிகளைக்கூட கதையை நகர்த்துமிடத்தில் மட்டுமே வைத்திருந்து தனக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆக, மிஷ்கின் சமீபத்தில் சொன்னதுபோல அவருடைய கேரியரில் இதுதான் முதல் படம் என்றே சொல்லலாம்..!
நந்தலாலா - தாலாட்டு

Thursday, November 25, 2010

நகரம் மறுபக்கம் - Nagaram Marupakkam

நடிகர்கள்
சுந்தர்.சி., அனுயா, வடிவேலு, ஜி.சீனிவாசன், போஸ் வெங்கட்
இசை
தமன்
இயக்கம்
சுந்தர்.சி
தயாரிப்பு
குஷ்பு சுந்தர்




ஒருவன் ரவுடியாக மாறுவதற்கு அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களே காரணம் என்பதைச் சொல்லும் கதை.

காக்க காக்க சூர்யா போல கதையை ஆரம்பிக்கிறார் சுந்தர்.சி,. அவரே அவர் கதையை சொல்லச் சொல்ல காட்சிகள் பின்னோக்கிப் போகிறது. காப்பியடிக்கப்பட்டாலும் இந்த யுக்தி, எந்த விதத்திலும் படத்தை முன்னோக்கி செலுத்த உதவவில்லை. அதனால் என்ன? வடிவேலு இருக்கார். பிழைச்சோம்!

சின்னச் சின்னத் திருட்டுக்களை செய்து வந்த லோக்கல் ரவுடியான சுந்தர், போதைப் பொருள் விற்பனை செய்து வந்த தாதாவுக்காக ஒரு கொலைப் பழியை தான் ஏற்றுக் கொண்டு 5 ஆண்டு சிறைத் தண்டனைப் பெற்று அப்போதுதான் விடுதலையாகி வெளியில் வருகிறார். சிறை மீண்ட சிற்பியை அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரான உயிர் நண்பன் வரவேற்று சுந்தருக்கு வேறு ஒரு கவுரவமான வேலை வாங்கித் தருவதாகக் கூறி மீண்டும் கடத்தல் தொழிலிலேயே ஈடுபடுத்தி விடுகிறார்.

இடையில் தான் சந்திக்கும் பெண்ணை தமிழ் சினிமாவின் இலக்கணப்படி காதலிக்கத் துவங்குகிறார் சுந்தர். அந்தப் பெண் சினிமாவில் நடனமாடும் பெண். அந்தப் பெண்ணின் அம்மா ஒரு கோடீஸ்வரனுக்கு வைப்பாட்டியாக இருந்து வருகிறார். அந்த அம்மாவுக்கு இதயத்தில் ஓட்டை. அதற்கு ஆபரேஷன் செய்ய பணம் வேண்டும். அம்மா தன்னைக் கீப்பாக வைத்திருப்பவனிடம் பணம் கேட்க மறுத்து, நோயினால் அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருக்கிறாள்.

இன்ஸ்பெக்டர் ஹோட்டல் ஒன்றில் பெண்ணுடன் ரூம் போட்டு குஜாலாக இருக்கப் போன இடத்தில் தேடி வந்த வம்பினால் வெட்டு, குத்தாகிறது. அதுவரையில் பிரச்சினையில் சிக்க மாட்டேன் என்று காதலிக்கு வாக்குக் கொடுத்த சுந்தரால் அதை மீற வேண்டிய கட்டாயம். இந்த அக்கப்போரில் ஒரு டாடா சுமோவை எடுத்துக் கொண்டு சுந்தரும், இன்ஸ்பெக்டரும் தப்பிக்கும்போது ஏரியா கமாண்டரான பாயின் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்து இன்ஸ்பெக்டரிடம் சிக்குகிறது. இதை துப்பறிந்த பாய் இன்ஸ்பெக்டரையும், சுந்தரையும் தேடுகிறார்.

அதற்குள்ளாக காதலியின் அம்மாவுக்கு சீரியஸாக கதாநாயகி தனது வளர்ப்புத் தந்தையிடம் பணம் கேட்கிறாள். அந்தக் கட்டைல போறவன் என்ன சொல்றான்னா, "நான் உனக்கு தந்தையும் இல்லை. காட்பாதருமில்லை. என்னிக்குமே மாமாதான். என்னைக் கல்யாணம் செஞ்சுக்க.. உன் அம்மா ஆபரேஷனுக்கு பணம் தருகிறேன்.." என்கிறான்.

ஏற்கெனவே சுந்தருடன் கோபத்தில் இருந்த நாயகி இதற்கு ஒத்துக் கொள்ளும்போது, வடிவேலு துணையுடன் இதனை டைவர்ட் செய்து ஆபரேஷனை மட்டும் செய்ய வைத்து விடுகிறார் சுந்தர். சுந்தரும், நாயகியும் அவசரம், அவசரமாக கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யும்போது, கல்யாணத்தன்று இன்ஸ்பெக்டர் சுந்தரிடம் "பாண்டிச்சேரிக்குப் போய் பாயை பார்க்க வேண்டும். உடனே வா.." என்றழைக்கிறான். காதலியோ "நான் முக்கியமா? அவன் முக்கியமா?" என்கிறாள். சுந்தர் "தனக்கு நண்பன்தான் முக்கியம்.." என்று சொல்லிவிட்டு பாண்டிச்சேரிக்குக்குச் செல்கிறார்.

அங்கே சுந்தரே எதிர்பார்க்காத தருணத்தில் பாயை போட்டுத் தள்ளுகிறார் இன்ஸ்பெக்டர். இதனால் நிச்சயம் வில்லங்கம் வரும் என்று நினைத்து சுந்தர், காக்கி நண்பனிடமிருந்து விலகியோட முயல்கிறார். விதி மறுக்கிறது. இன்ஸ்பெக்டரை காரோடு லாரியில் ஏற்றிக் கொள்ளப் பார்க்கிறார்கள். தப்பித்து மருத்துவனையில் ஒளிந்துக் கொள்கிறான் இன்ஸ்பெக்டர். தேடி வந்து தீர்த்துக் கட்டுகிறான் பாயின் மகன்.

அடுத்தது சுந்தர்தான் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு எதிரிகள் முன்னேற.. நாயகியோடு ஐதராபாத்தில் போய் செட்டிலாக நினைத்து சுந்தர் தப்பிக்க நினைக்க.. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் கடைசியில் நடக்கிறது..

நகரத்தில் நடக்கிற கதை என்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்குமா என்கிற அளவுக்கு இருக்கிறது ஒவ்வொரு காட்சிகளும். சுந்தர்.சி, ஆள் வளர்ந்த அளவுக்கு நடிப்பை வளர்த்துக் கொள்ளவில்லை. நிற்கிறார். நடக்கிறார். ஓடுகிறார். மூச்சிரைக்கிறார். ஆனால் முகத்தில் ஒரு மி.மீட்டர் எக்ஸ்பிரஷன் கூட இல்லை. ஆனால் ஒரு காட்சி பரபரப்பாக இருக்கிறது. தன்னை சுற்றியிருப்பவர்கள் தன்னிடம் நட்பாக பேசிக் கொண்டே தன்னை போட்டுத் தள்ள முயல்கிறார்கள் என்பது தெரிந்து அவர் காட்டும் சுறுசுறுப்பு.

இவருக்கு ஜோடி அனுயா. திமிறி நிற்கிற குதிரை. ஆனால் குளோஸ் அப்தான் கொடுமை. அப்பா ஸ்தானத்தில் இருக்கிற மனுஷன், தன்னையே அடைய நினைக்கிற போது அவர் அடைகிற அதிர்ச்சியையும் அருவருப்பையும் அப்பட்டமாக முகத்தில் கொண்டு வந்திருக்கிறார். திருந்திவிட்டதாக சொன்ன சுந்தர்.சி மீண்டும் பைட் பண்ணும்போது அனுயா அடைகிற துக்கமும் ரசிகர்களை என்னவோ செய்கிறது.

'புதிய வார்ப்புகள்' படத்தில் பார்த்தது. அதன்பின் பல வருடங்கள் கழித்து வில்லத்தனம் பண்ணியிருக்கிறார் ஜி.சீனிவாசன். வயசானாலும் அந்த முறைப்பு போகவில்லை. இரண்டாவது நாயகன் போலவே படம் முழுக்க வருகிறார் போஸ் வெங்கட். நடிப்பும் அட்டகாசம்.

இடையில் சுந்தருடன் மனஸ்தாபப்பட்டு பிரிந்து சென்ற வடிவேலுவின் வீட்டிற்கே நேரில் சென்று சமாதானம் செய்த குஷ்புவின் சாமர்த்தியத்தைக் கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும். படத்தில் 'தலைநகரம்' மாதிரியே அதகளம் செய்திருக்கிறார் 'ஸ்டைல் பாண்டி'யாக வரும் வடிவேலு.

இனி நகைச்சுவைக் காட்சிகளில் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகளும் நிச்சயம் இடம்பெறும். மனிதர் படத்திற்கு படம் மெருகேற்றிக் கொண்டே செல்கிறார்.. நூறாவது தடவையாக கொள்ளையடிக்கச் செல்லுமிடத்தில் வடிவேலுக்கு கிடைக்கும் மரியாதை.. வயிற்று வலியே வந்துவிட்டது.. இது மாதிரியான ஐடியாவெல்லாம் எங்கேயிருந்துதான் கிடைக்கிறதோ தெரியவில்லை. தமிழ் சினிமாவில் கதைகளுக்குத்தான் பஞ்சமே தவிர.. நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டும் பஞ்சமேயில்லை.

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் என்றாலும், ரசிக்க அது தடையாக இல்லை. அதேபோல படத்தின் நீளத்தை சற்றுக்குறைத்திருக்கலாம். இன்னும் எத்தனை காலம்தான் வில்லனோ, வில்லனின் ஆட்களோ, டாக்டர் உடையில், ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து கொலை செய்துவிட்டு தப்பி விடுவார்களோ?!

தமன் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம் ரகம். இளம் இசையமைப்பாளர் என்றாலும், பின்னணி இசையைக் கையாள்வதில் நல்ல முதிர்ச்சி. துறைமுகத்துக்குள் இயங்கும் மாபியா உலகை படம் பிடித்துக் காட்டியதில் இயக்குநர்  சுந்தருக்கு நிகரான பங்களிப்பு புலித்தேவன் காமிராவுக்கு. ஒரிஜினலாகக் காட்ட மெனக்கெட்டிருக்கிறார்.

நகரம் மறுபக்கம் - சிரிக்க மட்டும்

மந்திர புன்னகை - Mandhira Punnagai

நடிகர்கள்
கரு.பழனியப்பன், மீனாட்சி, சந்தானம், மகேஸ்வரி, ரிஷி, தம்பி ராமையா, நகுலன் பொன்னுசாமி
இசை
வித்யாசாகர்
இயக்கம்
கரு.பழனியப்பன்
தயாரிப்பு
நாகராஜன், கார்த்திக் நாகராஜன்



செக்ஸ் ரீதியான பயத்தினையும் அதன் காரணமாக 'காதல்' மீதான பயத்தோடும் தனக்கென தனி உலகத்தை சிருஷ்டித்து வாழும் தனி மனிதனின் கதையே மந்திர புன்னகை!

தான் அன்பு வைத்த அம்மா, அப்பாவுக்குத் துரோகம் செய்து ஓடி விடுவதால் தன் மேல் அன்பு வைக்கும் பெண்ணும் அதே போல் தனக்குத் துரோகம் செய்து விடுவாள் என கற்பனை பண்ணிக்கொள்ளும் இளைஞன், அந்தப் பெண்ணுடன் நடத்தும் நாடகம் தான் திரைக்கதை.

இப்படத்தை இயக்கி, அந்த தனிமனிதனாக நடித்திருக்கிறார் கரு.பழனியப்பன். மது, மாது, மங்கை என வாழும் கட்டிடப் பொறியாளரான பழனியப்பனை அலுவலக ரீதியாக சந்திக்கிறார் நாயகி மீனாட்சி. வழக்கமான தமிழ் கதாநாயகிகள் போல நாயகன் மீது விரைவில் காதலும் கொள்கிறார். அதே நேரத்தில் நாயகனின் மீது காதல் கொள்ளும் அவரது தோழியான விபச்சாரப் பெண் ஒருவரும், அவரை மணந்துக் கொள்ள விரும்புகிறார்.

இதற்கிடையில் கரு.பழனியப்பனின் தந்தை, "எந்த நல்ல பழக்கமும் இல்லாத உனக்கு எப்படி நல்ல பெண் மனைவியாக அமைய முடியும். உன்னைப்போலதான் அவளும் இருப்பாள் என்று கூற", அதிர்ந்துபோகும் கரு.பழனியப்பன், அப்பாவின் பேச்சையும் மீறி மீனாட்சியை மணம் முடிக்க முற்படும்போது, மீனாட்சியை வேறு ஒரு நபருடன் படுக்கையில் பார்த்து விட, தன்னை ஏமாற்றிய மீனாட்சியை அடித்து கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைகிறார். பிணத்தைக் கைப்பற்ற காவலர்கள் கரு.பழனியப்பனின் இல்லத்திற்கு வர அங்கு அதுபோன்ற எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று பக்கத்து வீட்டுக்காரர் கூற, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மீனாட்சியும் சிறு காயம் கூட இல்லாமல் உயிருடன் வருகிறார்.

அதற்குப்பிறகு காட்சிகள் வேகமாக நகர, படத்தின் மீது ரசிகர்களுக்கும் பரபரப்பு தொற்றிகொள்கிறது. பிறகு பலவிதமான கேள்விகளுக்கும், பல முடிச்சுகளுக்கும் விடை கொடுக்கிறார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

வாய்ப்புக்கள் கிடைக்கும் போது தாங்கள் விரும்பியதை அல்லது தங்களையே உணர்ந்து பார்க்க மனிதனைத் தூண்டுகிறது. இதுவரை நான்கு படங்களை இயக்கியிருந்த பழனியப்பன், ஐந்தாவது படத்தை தன்னை வைத்தே சோதித்துப் பார்க்க முடிவு செய்துவிட்டார். சில நேரங்களில் இயல்பாகத் தோன்றினாலும், பல தருணங்களில் நடிப்பது தெரிந்திருக்கிறது. செயற்கையான ஹீரோயிசம், தேவையில்லாத குளோஸ் அப் ஷார்ட்டுகள், பயனற்ற நீளமான வசனங்கள் என 'மந்திரப் புன்னகை' வழுவின்றி போய்விட்டது.

புகை சூழ நடைபெறும் நாடகக் காட்சியினைப் போன்றே மொத்தப் படமும் நகல்கிறது. காட்சியமைப்புகளும், வெளிச்சமின்மையும் புன்னகையை பொலிவிழக்க வைத்துவிட்டன. இடைவேளைக்கு முன்பும், பின்பும் மட்டுமே இயக்குநரின் முத்திரை தெரிகிறது. படத்தின் மற்றப் பகுதிகள் அனைத்தும் ரசிகர்களை கொட்டாவி விடவே வைத்திருக்கின்றன. முதல் பாதியில் ரசிகர்களை எரிச்சலுற வைத்தாலும், பிற்பாதியில் ரசிகர்களை கவர முயன்றிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் சிறு சிறு முடிச்சுகளை இயக்குநர் அவிழ்த்ததும், படம் உடனடியாக க்ளைமாக்சை நோக்கிப் பயணிக்கிறது. மிகுந்த உணர்ச்சிமயமாக இருப்பது ரசிகர்களை உணர்ச்சிப்பட வைக்காது, சினிமாத்தனமாகவே தெரிகிறது. ஒரே மனிதனைச் சுற்றி பிணையப்பட்டுள்ள இக்கதை, ரசிகர்களிடம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. முன்பு சேரனுக்கு 'ஆட்டோக்ராஃபில்' பலித்தது, பழனியப்பனுக்கு 'மந்திரப் புன்னகையில்' பலிக்காது போய்விட்டது.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றாலும், மீனாட்சி ஏனோ! ஒட்டாமல் போகிறார். இவர் பேசும் வசனங்கள் மனதில் நிற்கும் அளவிற்கு மீனாட்சியின் கதாபாத்திரம் மனதில் நிற்கவில்லை. அந்த இடத்தையும் கரு.பழனியப்பனின் கதாபாத்திரமே ஆட்கொள்கிறது. மகேஸ்வரியின் கதாபாத்திரமும் ஒப்புக்கு சப்பாணியாகவே தோன்றுகிறது.

படத்துக்கு தூண் மாதிரி சந்தானம், விவேக்குக்குப் பிறகு டிரஸ்ஸிங் சென்ஸில் கலக்கும் காமெடியன் இவர்தான். ஹீரோவை விட சூப்பராக டிரஸ் பண்ணி வருகிறார். மெடிக்கல் ஷாப்பில் காண்டம் கேட்கக் கூச்சப்படும் காட்சியில் பின்னிப் பெடல் எடுக்கிறார்.

வித்யாசாகரின் இசை ஆர்ப்பாட்டமாய் இல்லாவிட்டாலும், படத்திற்கு ஏற்றதாய் இருக்கிறது. அதில் ஒரு பாடலில் அறிவுமதியின் 'இந்த காதல் கொள்ள எத்தனை காமம் கடந்து வந்தேன்' வரிகள் அருமை.

முக்கியமாய் அந்த ப்ளாஷ்பேக் காட்சி நிதர்சனம். அதில் நடித்திருக்கும் மனோஜ்கிருஷ்ணா, இயக்குநர் நகுலன் பொன்னுசாமி ஆகியோரின் நடிப்பு மிக யதார்த்தம். அநாவசிய ட்ராமாவை டோட்டலாக தவிர்த்தற்காக இயக்குநரைப் பாராட்ட வேண்டும். மெல்ல கதை அன்போல்ட் ஆனாலும் இரண்டாவது பாதியில் டாப் கியரில் போயிருக்க வேண்டிய படம்.

க்ரைம், மனநலம் என்றலைந்து டீவியேட் ஆகிவிடுவது சோகமே.. பழனியப்பன், மீனாட்சிக்குமிடையே ஆன விஷயங்களில், அவர்களுக்குண்டான உணர்வுப் போராட்டங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். ரிஷி என்கிற கேரக்டரை அறிமுகப்படுத்திவிட்டு உபயோகிக்காமல் விட்டது? அவ்வளவு ட்ரீட்மெண்ட், மருந்து என்று எடுத்துக் கொள்ளும் பழனியப்பன், மீனாட்சி பேசும் பேச்சைக் கேட்டு சரியாவது எப்படி? எனபது போன்ற பல கேள்விகள் தொக்கி நிற்கத்தான் செய்கிறது.

மந்திரப் புன்னகை - மாயை

Sunday, November 21, 2010

வல்லக்கோட்டை - Vallakottai

நடிகர்கள்
அர்ஜூன், ஹரிப்ரியா, சுரேஷ், ஆஷிஷ் வித்யார்த்தி, கஞ்சா கருப்பு, லதா, வின்சென்ட் அசோகன், சத்யன், லிவிங்ஸ்டன், பிரேம், ஓ.ஏ.கே.சுந்தர்
இசை
தினா
இயக்கம்
ஏ.வெங்கடேஷ்
தயாரிப்பு
  டி.டி.ராஜா


Tamil Movie - Vallakottai Review - Arjun, Ashish Vidyarthi, Kanja Karuppu, Livingston, O.A.K. Sundar, Prem, Sathyan, Suresh, Vincent Asokhan, Haripriya, Kalairani, Latha, Mohana Mahendran, Anjaneyalu, A. Venkatesh, A. Venkatesh, Dhina, T.D. Raja, A. Venkatesh, G.K. Gopinath, Thalapathi Dinesh,  Tamil Movie Actor, Actress


ஆக்ரோஷமான ஒரு மனிதனால், சமுதாயத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதுதான் கதை.
சின்ன சின்ன குற்றங்கள் செஞ்சு நல்லவங்களுக்கு உதவுற கைதி அர்ஜூன். ஜெயில் நண்பனோட தம்பியின் உயிரைக் காப்பாத்த பணம் வேணும்கிறதால ஒரு கொலைப்பழியை ஏத்துக்க சம்மதிச்சு வல்லக்கோட்டைக்கு வர்றாரு. அங்குள்ள ஆஷிஷ் வித்யார்த்தி, வின்சென்ட் அசோகன், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரைக் கொண்ட வில்லன் கம்பெனி உள்ளூர் ஜமீன்தார் சுரேஷை போட்டுத் தள்ளிவிட்டு பழியை அர்ஜூன் மீது போட இருக்கிறது. வந்த இடத்தில் கொல்லப்படப் போகிறவர் நல்லவர் என்பதை அறிகிறார் அர்ஜூன். அதோடு அவர் காதலிக்கும் ஹரிப்ரியாவை அடைய, வின்சென்ட் அசோகன் நினைக்கிறார். ஒரு ஹீரோவுக்கு இந்த விஷயம் போதாதா? விதவிதமான வேடங்களில் வந்து வில்லன் கூட்டத்தை ஒழித்துக் கட்டுகிறார்.
தான் கமர்ஷியல் இயக்குநர்தான் என்பதை மறுபடியும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். படத்தில் வரும் திருப்புமுனை, காட்சிகள் என அத்தனையும் ஏற்கனவே பார்த்ததுதான். ஏன், அது வெங்கடேஷ் இயக்கிய படங்களிலேயே பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட பழமையான கான்செப்ட்.
அர்ஜூனுக்கு வயசாகிப் போச்சு. ஆனாலும் உடம்பை கும்முன்னு வச்சிக்கிட்டு பாஞ்சு பாஞ்சு சண்டை போடுறார். சூப்பரா டான்ஸ் ஆடுறார். முகத்தை அப்பாவியா வச்சுக்கிட்டு அவர் பண்ற காமெடியும் நல்லாயிருக்கு. இந்த டப்பா படத்துக்கு தன்னால என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதைத் தெளிவா செஞ்சிருக்கார்.
ஒவ்வொரு ஆங்கிளிலும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார் ஹரிப்ரியா. அநீதி கண்டு பொங்கும் அவருக்கு அடுக்கடுக்காக வந்து சேரும் சோதனைகளும், அதைத் தாங்க முடியாமல் அவர் அதிர்ச்சியடைவதும் சோக எபிசோட்.
படத்தில் அர்ஜூனின் ஆக்ஷனில் இருந்து கொஞ்சம் ஆறுதலாக இருப்பது கஞ்சா கருப்புவின் காமெடி. வடிவேலுவின் இடத்தில் கஞ்சாவை வைத்திருக்கிறார்கள். பெயருக்கு ஏற்றவாறு இவரின் காமெடி கிக் தூக்கலாகத்தான் இருக்கிறது. சத்யனும் அவ்வப்போது காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் இவரின் காமெடிக்கு ரசிகர்கள் சிரிக்க முயற்சிக்கவே இல்லை.
இளிச்சவாப்பய வில்லன் கோஷ்டி பத்தி சொல்ல ஒண்ணும் இல்ல. படத்துல மத்த எல்லாமே அல்லக்கை குரூப்ஸ்தான். கலைஞரோட 'கண்ணம்மா' திரைக்காவியத்துல நடிச்ச ராசி - பிரேம் இந்தப்படத்துல துக்கடா வில்லனா வர்றார். கலைராணி இனிமேல் தமிழ் சினிமாவுல அழுவாச்சி அம்மாவா நடிக்கக் கூடாதுன்னு யாராவது தடை கொண்டு வாங்கப்பா.. படத்தில் ஷகிலா சேச்சியும் உண்டு.
ஆக்ஷன் படத்தில் லாஜிக் கொஞ்சம் முன்ன பின்னதான் இருக்கும் என்பார்கள். அதற்காக அர்ஜூன் போடும் மாறுவேடத்தை கூட கண்டுபிடிக்க முடியாத நம்பியார் காலத்து வில்லன்களாகவா ஆஷிஷ் வித்யார்த்தியும், வின்சென்ட்டும் இருப்பார்கள்?
வல்லக்கோட்டை என முருகன் தள பெயரையும், வேல் கம்பையும் டைட்டில் ஆக்கிவிட்டு, படம் முழுக்க அர்ஜூனை வாயுபுத்ரன் என்று கூறி ஆஞ்சநேயர் பாடலை பாட விடுவது கோட்டையா... குறட்டையா? என்பதை இயக்குநர்தான் சொல்ல வேண்டும்.
தினா இசையில் 'செம்மொழியே'... பாடலுக்கு தாளம் போடலாம். தளபதி தினேஷின் சண்டைப் பயிற்சியும் அனல் தெறிக்கிறது. ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு சுமார்.
படத்திற்கு பிளஸ்ஸே லொக்கேஷன்தான். நதியும் நதி சார்ந்த இடமுமாக பார்க்கப் பார்க்க ஜலதோஷமே வந்து விடும் போலிருக்கிறது. இந்த சுழித்தோடும் நதியில் படகும், படகுக்குள் ஃபைட்டுமாக ரிஸ்க் மேல் ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள் அத்தனை பேரும். அதற்காக (மட்டும்) பாராட்டலாம்.
வல்லக்கோட்டை - மன(ண்)கோட்டை!

ஓர் இரவு - Orr Iravu

Tamil Movie - Orr Iravu Review - Ajay, Anandh, Chandrasekar, G. Sathish, Asha, Avanthika, Indhira, Hari Shankar, Harish Narayan, Krishna Sekar, K. Venkatprabhu Shankar, Hari Shankar,  Tamil Movie Actor, Actress
நடிகர்கள் 
சதீஷ்.ஜி, அவந்திகா, ஆஷா, இந்திரா, அஜய், ஆனந்த், சந்திரசேகர்
இசை
கே.வெங்கட்பிரபு சங்கர்
இயக்கம்
ஹரிசங்கர், ஹரீஷ் நாராயண், கிருஷ்ண சேகர்.
தயாரிப்பு
ஹரிசங்கர்

ஆவிகள் உண்டா? என்ற கேள்விக்கு விடையளிக்கும் படம்

டி.வி நிகழ்ச்சியாக தொடங்குகிறது படம். அமானுஷ்ய ஆராய்ச்சியாளர் நகுலன் (சதீஷ்.ஜி) ஆவிகள் நடமாடுவதாக கூறப்படும் வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பதை வீடியோ மூலம் பார்க்கலாம் என காட்சிகள் ஆரம்பமாகிறது. "நான்தான் இறந்துபோன நகுலன் பேசுகிறேன். நான் எப்படி இறந்தேன் என்பதை நானே சொல்கிறேன்" என்றபடி திகிலுடன் அடுத்தடுத்து காட்சிகளும் சுழல்கிறது.
 
மூணார் அழகான மலைப்பிரதேசம். இயற்கையின் நன்கொடை. மஞ்சு கவிகிற அத்துவானக் காட்டில் உள்ள ஒரு வீட்டில் ஆவி ஆராய்ச்சி நடத்துவதற்காக சென்றவர்கள் செத்துப்போகிறார்கள். மலைப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஆவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த வீட்டுக்கு செல்லும் பலர் மர்மமாக சாகிறார்கள். அங்கு ஆவிகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து சொல்லும்படி ஆவி ஆராய்ச்சியாளர் சதீஷ்.ஜியை அவ்வீட்டின் உரிமையாளர் அனுப்பி வைக்கிறார்.
முதல் கட்ட ஆராய்ச்சியை முடிக்கும்போது ஆவி இருப்பதற்கான அடையாளம் எதுவுமில்லை. அடுத்த கட்ட ஆராய்ச்சியில், யாரோ கத்துவதுபோல், பளிச்சென ஒளி தெரிவதுபோல் பல அனுபவங்களை உணர்கிறார். வீட்டின் சொந்தக்காரருக்கு போன் செய்து, "ஏற்கெனவே இந்த வீட்டிற்கு யாரும் வந்திருக்கிறார்களா? என்று சதீஷ் கேட்க, 3 பேர் போனார்கள். 2 பேர் செத்துவிட்டார்கள். ஒருவர் மாயமாகிவிட்டார்" என்று பதில் வருகிறது. அதிர்ச்சி அடையும் சதீஷ், ஆராய்ச்சியை தீவிரப்படுத்துகிறார். பிறகு என்ன என்பது விறுவிறுக்க வைக்கும் இறுதிக்காட்சி.
கதாநாயகன்-கதாநாயகி இல்லாத இந்தப் படத்தில் துணை கதாபாத்திரங்களில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள். டிஜிட்டலில் படமெடுக்கிறோம் என்று வழக்கமான மதுரை, அரிவாள், பாட்டு, காமெடி என்று போகாமல் டிஜிட்டல் சினிமாவுக்கான சரியான கதை களத்தை கையிலெடுத்துக் கொண்டு, ஜெயித்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பாயிண்ட் ஆப் வியூ என்று முடிவெடுத்தவுடன் அதற்கேற்றார் போன்ற ஷாட் டிவிஷன்கள், கேரக்டர் பேசும் வசனங்கள், நடவடிக்கைகள் எல்லாமே மிக இயல்பு. அதே போல அந்த கேரக்டருக்கு வரும் பதட்டம், பயம் எல்லாமே அவ்வளவு இயல்பாய் ஒட்டிக் கொள்கிறது நமக்கு.
"பாரா நார்மல்" பற்றிய சிந்தனையை நகுலன் என்கிற கதாபாத்திரம் மூலம் சொல்லியவர்கள் இசைக்கருவிகள் மூலம் ஆவிகளைப் பற்றிய பயத்தை மேலும் அதிகமாக்கி விட்டார்கள்.
மூணாறு போகும் வழியில் லிப்ட் கேட்கும் வில்லிவாக்கம் ரவியின் பேச்சினிடையே உலவும் காமெடியும், பின் அதே கேரக்டரை வைத்து உறையும் இடமும் சூப்பர். "இந்த மாதிரி இடத்தில நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏன்னா சில சமயம் நம்ம நிழலே நம்மை பயமுறுத்தும்" என்று சதீஷ்.ஜி பேசும் வசனங்கள் மிக ஷார்ப். இறுதிக்காட்சியை நோக்கி போகும் நேரத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்பவர்களுக்கு இருக்கிறது..... நிச்சயம் இருக்கிறது. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாய் படவில்லை. அதையெல்லாம் மீறி படம் பிரமிப்பாக இருப்பதை மறுக்க முடியாது. இந்தப் படத்தின் நாயகன், நாயகி, வில்லன் எல்லாம் கேமராதான். கேமராவின் பார்வையிலேயே கதையைச் சொல்வது புதிய பாணி. எளிதும் அல்ல! உழைத்தவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
மனிதர்களுக்கும் அமானுஷ்யங்களுக்கும் இடையே ஒரு கோடு இருக்கிறது. அந்த கோட்டை தாண்டாதவரை பிரச்சினை எதுவும் இருக்காது என்று கருத்து சொல்லி முடிக்கின்றனர்

தொட்டுப்பார் - Thottupaar

நடிகர்கள்
வித்யார்த், லக்ஷணா, அனுஹாசன், ரமணா, அழகம் பெருமாள், வி.எம்.சி.ஹனீபா, 'அயன்' ஜெகன், மயில்சாமி
இசை
ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்
நந்து
தயாரிப்பு
ஜானகி சிவகுமார்



Tamil Movie - Thottupaar Review - Ayan Jagan, Azhagam Perumal, Mayilsamy, Ramana, V.M.C. Haneefa, Vidhyarth, Anu Hassan, Lakshana, Remian, Sasikumar, Nandhu, Nandhu, Perarasu, Srikanth Deva, Janaki Sivakumar, Nandhu, Nandhu,  Tamil Movie Actor, Actress

முன்ன பின்ன தெரியாத ஆளுங்களுக்கு ஜாமீன் போட்டா என்னவெல்லாம் விபரீதம் நேரிடும் என்பதை சொல்லும் கதை.
மதுபானக் கடையில் பணிபுரியும் நாயகன் வித்யார்த், ஒரு கைகலப்பில் சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்குள்ள காவல்துறை அதிகாரியான கொச்சின் ஹனீபா அவருக்கு வேறொரு தொழிலை கற்றுக் கொடுக்கிறார். போலி ரேஷன் கார்டு மூலம் குற்றவாளிகளை ஜாமீனில் எடுப்பதுதான் அந்த தொழில். வசூல் பணத்தை இருவரும் பங்கு போட்டுக் கொள்கின்றனர். இப்படி போகிற பொழப்புல விழுகிறது மண். போலீஸ் சந்தேகத்தின் பேரில் பிடிக்கும் ஒருவனையும், தனக்குத் தெரிந்தவன் என சொல்லி காசு வாங்கி வெளியே விட வைக்கிறார் வித்யார்த். அவனோ மந்திரியை தீர்த்து கட்டி விட்டு தப்புகிறான். கொலையாளியுடன் வித்யார்த்துக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகித்து போலீஸ் தேடுகிறது. ஹனீபா அவரை ரகசியமாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார்.

சென்னை வரும் வித்யார்த் மதுக்கடையில் வேலைக்கு சேர்கிறார். பாரில் போதையில் விழுந்து கிடக்கும் அழகம் பெருமாளை வீட்டில் கொண்டு சேர்த்து அவர் குடும்பத்தாருடனும் நெருக்கமாகிறார். அப்போது வித்யார்த்தை கொல்ல ரவுடி கும்பல் முயற்சிக்கிறது. இதில் ஹனீபா கொல்லப்படுகிறார். போலீசும் வித்யார்த்தை துரத்துகிறது. இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வித்யார்த் எப்படி தப்புகிறார் என்பது மீதிக்கதை.
படத்தின் டைட்டில் டிசைனில் பீர் பாட்டில்கள் டிசைன் வரும்போதே தெரிந்து விடுகிறது கதைக்களம் டாஸ்மாக்தான் என்று. கதாநாயகன் பாரில் வேலை செய்பவராகக்காட்டியதில் இயக்குநருக்கு எவ்வளவு சவுகரியம். குத்தாட்டம், மப்புக்காட்சிகள் என படம் ஒரே போதை மயம்தான்.
புதுமுகம் வித்யார்த்தான் நாயகன். தாதா கேரக்டர், வேலை வெட்டி இல்லாத ஆள் கேரக்டர் என்றாலே தலை சீவக்கூடாது, பரட்டையாக ஹிப்பி தலையோடு இருக்க வேண்டும் என்று கோடம்பாக்கத்தின் எழுதப்படாத சட்டத்தின் பிரகாரம் கெட்டப் போட்டிருக்கிறார். நடிப்பு சுமார்தான் என்றாலும் தனக்கு வாழ்வளித்த இன்ஸ்பெக்டர் கண்ணெதிரே இறந்து போனதும் அவர் எடுக்கிற மின்னல் வேக ஆக்ஷன் இருக்கிறதே, அது சண்டை பிரியர்களுக்கான விருந்து.
வித்யார்த்தின் காதலியாக வந்து போகும் லக்ஷணாவுக்கு பேருக்கேத்த மாதிரி லட்சணமான முகம்தான். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுக்கக்கூடிய அம்சம் இல்லை. இருந்தாலும் கன்னக்குழி அழகு, உதட்டழகு என முடிந்தவரை சமாளிக்கிறார்.
வில்லனாகியிருக்கிறார் ரமணா. கூவாகம் திருவிழாவில் பெண் வேடத்தில் அவரை காட்டும் போதுதான் தெரிகிறது. பார்ட்டி 'அந்த' ரகம் என்று. அந்த பார்வையும், பாடி லாங்குவேஜும், முரட்டு உதைகளும் பயங்கரம். ரமணா மனசு வைத்தால் வில்லன் வேடத்தில் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்கு கலக்கலாம். ஹனீபா நடிப்பு திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.
'இந்திரா' படப் புகழ் அனுஹாசன் டாக்டராக வந்து கண்ணியமான நடிப்பை வழங்கி இருக்கிறார். அவரது டிரஸ்ஸிங் சென்ஸ் அற்புதம். காமா சோமா என்று உடை உடுத்தும் நடிகைகளுக்கு நல்ல ஒரு படிப்பினை இவரது கவுரவமான உடைகள்.
தண்ணி அடித்த நபர் ஒருவர் வித்யார்த்துக்கு 100 ரூபாய் டிப்ஸ் வைப்பதும், பின் டிப்ஸ் வைத்தவரின் குழந்தை சாப்பாட்டுக்கு கதறுவதும் டச்சிங் சீன். 'ஆடி மாசம் காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க பாட்டு' ரீ மிக்ஸா இருந்தாலும் பிக்சரைசேஷனில் மனம் கவர்கிறார்கள்.
'அயன்' ஜெகன், மயில்சாமி கூட்டணியின் காமெடி சிரிக்க வைக்கிறது. தலைப்புக்கு ஏற்ப இன்னும் வலுவாக ஆக்ஷன் சீன்களை தொகுத்து இருக்கலாம். கதை மதுக்கடையிலும், அனுஹாசன் வீட்டிலும் வெகு நேரம் முடங்குவதை தவிர்த்து இருக்கலாம்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் சொல்லிக்கிற மாதிரியில்லை. ஒளிப்பதிவாளர் சசிகுமார் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார். கையை கட்டிப் போட்டுவிட்டு கத்தரியை கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இருந்தும் இல்லாமலிருக்கிறார் எடிட்டர்.
அறிமுக இயக்குநர் நந்து திரைக்கதையில் சுவாரஸ்யமான காட்சிகளை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக செல்ல வைத்திருக்கிறார். அதோடு இரட்டை அர்த்த வசனக்காட்சிகளையும் தவிர்த்து கண்ணியமாக காட்சிகளை கையாண்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
தொட்டுப்பார் - ஒரப்பில்லாத ஊறுகா!

Wednesday, November 10, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - Boss Engira Baskaran

நடிகர்கள் 
ஆர்யா, நயன்தாரா, சந்தானம், சுப்பு பஞ்சு, விஜயலட்சுமி, 'நான் கடவுள்' ராஜேந்திரன்
இசை 
யுவன் சங்கர் ராஜா
இயக்கம் 
ராஜேஷ் எம்.
தயாரிப்பு 
கே.எஸ்.சீனிவாசன்

Tamil Movie - Boss Engira Baskaran Review - Arya, Ashwin Raja, Rajendran, Santhanam, Friends Vijayalakshmi, Nayantara, Sakthi Saravanan, Rajesh .M, Rajesh .M, Yuvan Shankar Raja, K.S. Srinivasan, Rajesh .M, Rajesh .M,  Tamil Movie Actor, Actress

பொறுப்பு இல்லாமல் வெட்டியாக சுற்றித்திரியும் ஒருவன், காதலுக்காக எப்படி பொறுப்புள்ளவனாக மாறுகிறான் என்பதே கதை.
வெட்டியாக சுற்றுவதையே வேலையாகப் பார்க்கும் ஆர்யாவுக்கு காதல் மட்டும் கரெக்டாக வந்து விடுகிறது. பல வருடங்களாக பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் ஆர்யாவுக்கும், லெக்சரர் நயன்தாராவுக்கும் 'பிட்' அடிக்கிற விஷயத்தில் பிரச்சினை வந்து அதுவே காதலாகி விடுகிறது. தான் காதலிக்கும் நயன்தாராவின் அக்காவே அண்ணனின் மனைவியாக வந்துசேர, உடனே நேரடியாகவே அண்ணியிடம் பெண் கேட்கிறார். 
வேலைவெட்டியில்லாத உனக்கு எப்படி என் தங்கையைத் தர முடியும் என்று அண்ணி கேட்க, ரோசப்பட்டு நான் சம்பாதித்து காட்டுகிறேன் என்று வீட்டை விட்டு வெளியேறும் ஆர்யா, சந்தானத்தின் உதவியோடு எப்படி பணம் சம்பாதித்து, பெரிய ஆளாகி நயன்தாராவை கைப்பிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.
ரொம்பவே யூத்தாக இருக்கிறார் ஆர்யா. டீன் ஏஜ் வயதின் சுட்டித்தனத்தை, இளைஞர் பருவம் வரை கடைபிடித்து ஊரிலும், வீட்டிலும் வெட்டிப் பையனாக பேர் எடுக்கும் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக பொருந்தி நடித்திருக்கிறார். பாக்கெட் நிறைய பிட் வைத்துக் கொண்டு பரீட்சை எழுத கிளம்புவதிலிருந்து தான் ஆரம்பிக்கும் டுட்டோரியலுக்கு ஷகிலாவை டீச்சராக கொண்டு வருவது வரை 
அமர்க்களப்படுத்துகிறார். அவருடைய டைமிங் ரியாக்ஷன்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து, கைதட்டலை அள்ளுகிறார். அவர் கூலிங் கிளாஸ் மாட்டுவதும், கழட்டுவதும் என தன்னுடைய ஒவ்வொரு மேனரிசத்திலும் கதையின் நகைச்சுவை பாதிப்பு இருப்பதால், நல்ல முத்திரையான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஆர்யா.
படத்தைத் தூக்கி நிறுத்தும் இன்னொரு கதாநாயகன் சந்தானம். 'கிரி' படத்தில் வடிவேலுக்கு பேக்கரி கிடைத்த மாதிரி சந்தானத்துக்கு சலூன் கிடைத்த பிளாஷ் பேக்கிலிருந்து ஆர்யாவின் வலது கரமாக இருந்து அவர் படும் அவஸ்தை ஒவ்வொன்றும் சரவெடி.
நயன்தாராவின் இயல்பான நடிப்பும், காதலை மனதிற்குள் பூட்டி வைத்துக் கொண்டு, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படும்பாடும் அசத்தல். கோபமாக பேசும்போது காமெடி வரணும் என்ற படத்தின் கான்செப்டில் கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால் உடம்பைதான் எடை குறைக்கிறேன் பேர்வழி என எலும்பும் தோலுமாக ஆக்கி வைச்சிருக்கே என்று கவலைப்பட வைக்கிறார்.
ஆர்யாவின் அண்ணனாக நடித்திருக்கும் சுப்புவுக்கு அசத்தல் வேலை. மாட்டு டாக்டர்! கல்யாண வயசை மிஸ் பண்ணிவிட்டு விஜயலட்சுமியிடம் வழியும் காட்சிகள் பேரிளமை ஆல்பம்! முதலிரவு தள்ளிப் போக, ஒரு பார்வையிலேயே எரிச்சலை காட்டுவதும் அற்புதம்.
கௌரவத் தோற்றத்தில் தோன்றும் ஜீவாவும், தனது பங்குக்கு கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார். முதல் படத்தின் ஞாபகத்தில் "மாமா ஒரு கோட்டர் சொல்லேன்" என்று கேட்கும் ஜீவாவின் குடிகார குழந்தை முகம் பிரமாதம்.
வட்டிக்கு விடும் 'நான் கடவுள்' ராஜேந்திரன் இதில் காமெடியில் அசத்தியிருக்கிறார். அவரது மகனாக வரும் அஸ்வின்ராஜ், கதையில் முக்கியமான ஒரு கதாபாத்திரம். சாப்பிடுவதும் தூங்கி வழிவதுமாக இருக்கும் அவர், படிப்பதற்காக முயற்சி செய்கிற காட்சிகளில் சிரிப்பு வெடி.
டுட்டோரியல் கல்லூரி கலாட்டாக்களில் யதார்த்தம் இல்லை. ஆனாலும் ஒரு அற்புதமான சென்ட்டிமென்ட் கலவை அந்த கூலிங்கிளாஸ் டீச்சர். பார்வையில்லாத அவர், யாருமே இல்லாத வகுப்பறையில் கிளாஸ் எடுக்க அதிர்கிற மக்கு மாணவன் மனம் திருந்துவதும், மற்ற மாணவர்களை மிரட்டி அழைத்து வருவதும் நெகிழ்ச்சி!
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் "யார் இந்த பெண்தான்..." பாடல் முனுமுனுக்க வைக்கும் பாடல், மற்ற பாடல்களும் கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன. கும்பகோணத்தில் வாழ்ந்துவிட்டு வந்த திருப்தியை சக்தி சரவணனின் ஒளிப்பதிவு உணர்த்துகிறது. ஒவ்வொரு பாடல் காட்சியிலும் ரசிக்க வைக்கின்ற பேக்ட்ராப் கலரில் பிரேம்களில் அசத்தல் ரசனை.
சீரியஸான காதல் கதையில் நகைச்சுவையை கலந்து முழு காமெடி படமா எடுத்திருக்கார், இயக்குநர் ராஜேஷ்.எம். சண்டைகாட்சி, காதை கிழிக்கும் சத்தம் என்று இல்லாமல் அமைதியான குடும்பம், அழகான காதல் என்று தந்திருக்கிறார்.

பாஸ் என்கிற பாஸ்கரன் - டிஸ்டிங்ஷன் பாஸ்!



tamilk..dal.com

மைனா - Mynaa

நடிகர்கள் 
வித்தார்த், அமலா பால், தம்பி ராமையா, சேது, செவ்வாளை, கார்த்திக், பூவிதா, மீனாட்சி
இசை 
டி.இமான்
இயக்கம் 
பிரபு சாலமன்
தயாரிப்பு 
ஜான் மேக்ஸ்


Tamil Movie - Mynaa Review - Sethu, Thambi Ramiah, Vidharth, Amala Paul, Vairabalan, Sukumar, Prabhu Solomon, Kannadhasan, Yugabarathi, D. Imann, John Max, Prabhu Solomon, Anal Arasu,  Tamil Movie Actor, Actress


தலை தீபாவளி கொண்டாட வேண்டிய ஒரு போலீஸ் அதிகாரி தீபாவளிக்கு முந்தின நாளும், தீபாவளி அன்றும் சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை.
தேனி மாவட்டம் குரங்கினி என்ற மலைக்கிராமம் தான் கதைக்களம். பெரியகுளம் கிளைச்சிறையில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. சிறுவயதிலேயே நாயகன்(சுருளி) நாயகியோட அம்மாவுக்கும், நாயகி(மைனா)க்கும் தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான். மைனாவின் மேல், சிறு வயது முதல் ஏற்பட்ட அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான். சூழ்நிலையில் நாயகியின் அம்மா காதலை எதிர்க்க, நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி என கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டெடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்து, சிறைக்கு கூப்பிட்டு வர வழியில் ஏற்படும் சம்பவங்களே மீதி கதை.
சுருளியாக வித்தார்த், தொட்டுப்பார் படத்தில் ஏற்கனவே அறிமுகமானவர். சுருளியாக ஊரில் சண்டித்தனம் செய்து கொண்டு, மைனாவிற்காகவே வாழும் ஒரு டிபிகல் தமிழ் சினிமா ஹீரோ. பரட்டைத்தலை, தாடி, ஊதாரித்தனம், அப்பனை மரியாதை இல்லாம பேசுறது இன்ன பிற இலக்கணங்களைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார். நடிப்பென்று பார்த்தால் சில காட்சிகளில் ஓ.கே. ஆனால் அதற்காக பருத்தி வீரனை நகல் எடுத்திருப்பது ஹ்ம்ம்....என்னத்த சொல்ல!!!
மைனாவாக அமலா பால்! சிறு ஒப்பனைக் கூட இல்லாமல் கிராமத்து அழகியாக வலம் வருகிறார். பாதி வசனங்களை இவர் கண்களே பேசி விடுகின்றது. இவர் அழகாகத் தெரிவதற்கு அந்த பாத்திரப் படைப்பும் ஒரு காரணம். முதல் படத்தை ஒப்பிடும் போது நடிக்க நிறைய வாய்ப்பு, சரியாக பயன்படுத்தி உள்ளார். பார்க்கலாம், இனி வரும் படங்களை எப்படி என்று.
படத்தில் வரும் அனைத்து நடிகர்-நடிகைகளும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் சேது, தலை தீபாவளிக்குப் போக முடியாத வெறுப்பை உமிழும் போது ஏ-கிளாஸ்! பின்னொரு சமயத்தில் தன் உயிரைக் காப்பாற்றும் சுருளியை நன்றி ததும்ப ஒரு பார்வை பார்ப்பாரே! சூப்பருங்க! அந்த முதல் காட்சியிலேயே இன்ஸ்பெக்டரின் மனைவி கேரக்டர் தெள்ளத் தெளிவாக நமக்குப் புரிகிறது. வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும்னு சொல்பவரிடம் 'வருவீங்களா மாட்டீங்களா'னு திரும்பத் திரும்ப கோபத்தில் கேட்கும்போது அரங்கத்தில் கைத்தட்டல்! பல பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க!
நாயகியின் அம்மா, நாயகனின் அப்பாவாக நம்ம செவ்வாளை, சில ஒன் லைனர்களால் சிரிப்பு மூட்டும் அந்த சிறுவன், பள்ளி வாத்தியார், இன்ஸ்பெக்டர் மனைவியின் அண்ணன்மார்கள், அண்ணிகள், அந்த பஸ் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள், மூணாறு சுப்பிரமணி என அனைத்து பாத்திரங்களும் நம் மனதில் நிற்பது இயக்குநரின் வெற்றி.
சுருளி- மைனா இருவருக்கும் ஏற்படும் காதல் படு தீவிரமாக காண்பிக்கப்படுவது தேவையான ஒன்றுதான். மைனா வீட்டில் கரண்ட் கட், விடிந்தால் பரீட்சை. அவள் படிப்பதற்காக சுருளி சைக்கிள் ஓட்டி அந்த டைனமோ கனெக்ஷனில் பல்பை எரிய வைத்துப் படிக்க வைப்பதும், பின் அதுவும் ஒர்க் அவுட் ஆகாததில் சுருளி மின் மினிப் பூச்சிகளை ஒரு பாட்டில் தண் ணீரில் பிடித்து அந்த வெளிச்சத்தில் படிக்க வைப்பதும் மனதைக் கவரும் காட்சிகள். அதற்கு நன்றிக்கடனாக மைனா உதட்டுடன் உதடு பதிப்பதில் காதலின் உச்சம், கிளாமரின் சொச்சம்.
பஸ் ஆக்சிடெண்ட்டில் 2 போலீஸ் அதிகாரியையும் சுருளி காப்பாற்றிய பிறகு அவர்கள் இடையே ஏற்படும் நல்லுறவை இன்னும் விஸ்தாரமாய் காண்பித்திருக்கலாம். க்ளைமாக்சில் கடைசி 30 நிமிடங்கள் பதைபதைப்பு. எதிர்பார்க்க முடியாத திருப்பம். காதலர்கள் சேருவார்களா, சேர மாட்டார்களா என சஸ்பென்ஸ் மெயிண்ட்டன் பண்ணுவதில் இயக்குநர் ரொம்பத் தெளிவாக இருக்கிறார்.
பயமுறுத்தும் குன்றுகள், இருள், காட்டுக்குள் யானை துரத்துவது என அனைத்துக் காட்சிகளும் 'தேனியின்' இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டுள்ளன. மேகக்கூட்டங்கள் நிறைந்த குன்றுகளைக் கொண்ட தேனியிலேயே நாம் இருந்து அந்த கதாபாத்திரங்களுடன் வாழ்வது போன்ற உணர்வு தோன்றுகிறது. இந்த நவீன யுகத்திலும் சில பழமை வாதங்களின் உண்மையை உணர முடிகிறது. குடும்பப்பகையுடன், கனத்த இதயத்தைக் கொண்ட இயல்பான கிராமத்துப் பெண்ணாக வலம் வரும் 'மைனாவின்' அம்மாவை அதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.
இரண்டு பாடல்கள் இதயத்தில் இடம் பிடிக்கின்றன. உயரமான மலைகள், செங்குத்தான பாறைகள், குறுகிய ஓடைகள், நீர்நிலைகள், பசுமையான பிரதேசங்கள் அவற்றை ஊடுருவி செல்லும் சாலைகள் என அனைத்தையும் ஒளிப்பதிவாளர் சுகுமார் அழகுறப் படமாக்கியிருக்கிறார். குறிப்பாக 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே' பாட்டு நல்ல மெலோடி. அந்தப்பாட்டின் சரணத்தில் தொட்டாற்சுருங்கி இலைகள் அமலா பாலின் இமைகள் பட்டு சுருங்குவது போல் காண்பித்து பின் மலர்வது போல் காண்பித்தது அழகியல் ரசனை. அந்தப்பாட்டில் அமலா பாலின் கன்ன பருக்களைக்கூட அழகாகக் காண்பித்து தன் முத்திரையை அழுத்தமாகப் பதிக்கிறார் சுகுமார். ஒளிப்பதிவாளரைப் போல கலை இயக்குநர் வைரபாலனும் நம் மனதில் இடம்பிடித்து விடுகிறார்.
பத்து பெரிய நட்சத்திரங்களை வைத்து கதை சொல்ல முடியாமல் சிலர் தவித்து வரும் நேரத்தில், நான்கே கதாபாத்திரங்களை வைத்து அழகுற கதை சொல்லியிருக்கிறது 'மைனா'. இது இடருக்குட்பட்டது என்றாலும் கூட, இயக்குநர் பிரபு சாலமன் துணிந்து இறங்கியிருக்கிறார்.
பிரபு சாலமனின் படங்கள் எல்லாமே நமக்கு ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவை. ஆனால் படம் முடிந்து வரும் போது 'இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாமோ'னு ஒரு எண்ணம் நமக்கு வரும். இந்தப் படம் அந்த எண்ணத்தை முற்றிலுமாய் நீக்கவில்லை என்றாலும், நிச்சயமாக அவரின் உழைப்பைப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தை எந்தத் தளத்தில் கொண்டு செல்வது என்ற சிறு தயக்கம் இயக்குநரிடம் இருந்தது போல் தெரிகிறது. ஒரு முழு காதல் கதையா, த்ரில்லரா, அல்லது ஒரு அட்வென்சர் படமா என்றில்லாமல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டுச் சென்றுள்ளது படம்.
மைனா - காதல் பயணம்

உத்தமபுத்திரன் - Uthama Puthiran

நடிகர்கள் 
தனுஷ், ஜெனிலியா, விவேக், பாக்யராஜ், கருணாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மயில்சாமி, அம்பிகா, ரேகா, அஸ்வினி, ஆர்த்தி, உமா பத்மநாபன்
இசை 
விஜய் ஆண்டனி
இயக்கம் 
மித்ரன் ஆர்.ஜவஹர்
தயாரிப்பு 
என்.வி.மோகன் அப்பாராவ், ஜி.ரமேஷ் தாண்ட்ரா


Tamil Movie - Uthama Puthiran Review - Ashish Vidyarthi, Bhagyaraj, Dhanush, Karunas, Mayilsamy, R. Sundar Rajan, Rajendran, Vivek, Aarthi, Ambika, Genelia, Rekha, Uma Padmanabhan, Uma Rani, M. Prabhakaran, Balasubramaniam, Mithran R. Javahar, Mithran R. Javahar, Thyagu, Vijay Antony, Mohan Appa Rao, Ramesh Dhantra, Mithran R. Javahar, Gopi Mohan,  Tamil Movie Actor, Actress 
பெரும் நட்சத்திர பட்டாளம் புடைசூழ காதல், சென்டிமெண்ட் கலந்த குடும்பக்கதை.
நண்பர்களின் காதலுக்கு மரியாதை செய்து அவர்களுக்கு உதவும் தனுஷ், ஒரு முறை நண்பனுக்காக மணக்கோலத்தில் இருக்கும் ஜெனிலியாவை கடத்திவிடுகிறார். தவறை உணர்ந்து வருந்தும்போது, 
"நானே அந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன், ரொம்ப தேங்ஸ்" என்கிறார் ஜெனிலியா.
ஆனால் அவள் குடும்பம் சும்மா விடுமா? அதுவும் ஜெனிலியாவின் சொத்துக்காகவே இந்த கல்யாணம் என்னும்போது விடுவார்களா? துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து ஜெனிலியாவை, தனுஷ் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது கதையின் தொடக்கம் மட்டும்தான். 
தனுஷுக்கும், ஜெனிலியாவுக்குமிடையே காதல் மலர்வது, ஜெனிலியாவைத் தன் வீட்டினர் ஒப்புக்கொள்ள தனுஷ் அரங்கேற்றும் நாடகம், அந்த நாடகம் அம்பலமாகும் சமயத்தில் குறுக்கிடும் வில்லன்களின் மிரட்டல், அந்த மிரட்டலைச் சமாளிக்க விவேக்கை பகடைக் காயாக்கி தனுஷ் ஆடும் நாடகம் என்று போகிறது திரைக்கதை. வில்லக் குடும்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மாற, கடைசியில் கொஞ்சம் சண்டை, நிறைய நெகிழ்ச்சி என்று சுபம் போடுகிறார்கள்.
தனுஷ் பெரும்பாலும் காலையில் எழுந்த சோர்வுடனே காணப்படுகிறார். அவரது முகம் எப்போதும் களைப்படைந்ததாகவே காட்சியளிக்கிறது. எப்போதும் சுறுசுறுப்பாகவே காணப்படும் தனுஷ் இப்படத்தின் முதல் பாதி முழுவதும் சோர்வாகவே காணப்படுகிறார். இருப்பினும் பிற்பாதியில் விவேக்குடன் இணையும் போது பழைய தனுஷை காணமுடிகிறது. ஆனாலும் வயிறு குலுங்க சிரிப்பதற்கு வாய்ப்பில்லை.
திட்டமிட்டோ அல்லது தெரியாமலோ தனது முந்தைய படங்களின் சாயலை இப்படத்தில் ஜெனிலியா தவிர்த்திருக்கிறார். ஜெனிலியா எடை கூடியிருப்பதை அவரது கன்னங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. முதல் சில காட்சிகளில் கேமராக்கள் தங்கள் எல்லையை மீறி ஜெனிலியாவை படம் பிடித்திருக்கின்றன. ஜெனிலியாவின் ஒப்பனையும் முகம் சுளிக்க வைக்கிறது.
இந்தப் படத்தின் துவக்கத்திலேயே விவேக் இல்லாவிட்டால் படம் போணியாகாது என்பது தனுஷிற்கு நன்கு தெரிந்திருக்கும் போலும். அதனால்தான் விவேக்கை விரட்டி, விரட்டிப் பிடித்திருக்கிறார் தனுஷ். 'நெஞ்சம் மறப்பதில்லை' டியூன் மனதில் விழுந்த பிறகு எப்போதும் செத்த பொணம் போல் நிற்கும் விவேக்கின் நடிப்பு அக்மார்க் நகைச்சுவை. 
சமீப காலங்களில் விவேக்கின் சிறந்த காமெடி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். தனி டிராக்காக வராமல், துணுக்குகளை நம்பாமல் திரைக்கதையோடு சேர்ந்து பயணிப்பதுதான் இந்த வெற்றிக்குக் காரணம் என்று சொல்லலாம். நகைச்சுவையை வசனத்தில் மட்டுமல்ல ஆக்ஷனிலும் காட்டலாம் என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் விவேக்.
அம்பிகா, ரேகா, அஸ்வினி, நித்யா, உமா பத்மநாபன், என்று பெரிய லிஸ்ட் இளம் அம்மாக்கள் வரிசை கட்டி கலர் காண்பிக்க.. நல்லாத்தான் இருக்கு. அது யாருப்பா அந்தச் சின்னக் கவுண்டரோட அம்மா..? உண்மையா இந்தப் படத்துல இவருடைய சவுண்டுதான் அதிகம். செம சவுண்டு. ஆளும் அழகுதான். யாருன்னு தெரியலையே..? தெரிஞ்சா சொல்லுங்கப்பா..!
பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், சுரேஷ்பாபு, ஆஷிஷ் வித்யார்த்தி, அந்த குண்டு தெலுங்கு வில்லன் என்று ஆண்கள் சைடும் ஈக்குவலாகத்தான் உள்ளது..!
படத்தின் தயாரிப்பாளர் பெரிய கை என்பதாலும், நடிப்பது தனுஷ் என்பதாலும், ஒரு நாள் கால்ஷீட்டுக்கே பெட்டி நிறைய பணம் கிடைத்ததாலும் ஸ்ரேயா படத்தின் துவக்கத்திலேயே வந்து போகிறார்..!
ஆனால் தனுஷின் கூட்டணி ஆட்கள்தான் சரியில்லை.. தன்னைப் போலவே ஒரு நடிகையாக கிரகிக்க முடியாத நிலையில் இருப்பவர் ஆர்த்தி என்பதால் மறைமுகமாக ஆர்த்திக்கு தனுஷ் நிறைய ஆதரவுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்..! ஆனாலும் அதற்காக குண்டுமணி என்று இவரே பெயர் வைத்துக் கூப்பிடுவது பொருத்தமாக இல்லை.
கருணாஸை அந்தக் கேரக்டரில் காண்பிப்பது ஏன் என்று தெரியவில்லை. இது போன்ற பணக்கார வீடுகளில் வேலை செய்யும் அரவாணிகள் என்றால், தேனி மாவட்ட ஊரான கம்பத்தில்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். சரி.. பரவாயில்லை என்று விட்டுவிட்டாலும் கருணாஸை ஜொள்ளுவிட வைத்து ஏமாற்றம் காட்டுவது ரசிக்கும்படி இல்லை.
ஒட்டு மொத்த படத்தின் ஒரே ஆறுதல் பாக்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே!
ஜெனிலியாவின் மாமன்கள் சக்கையாக ஏமாற்றப்பட்டாலும் கடைசியில் 'இட்ஸ் ஆல்ரைட்' ரேஞ்சுக்கு அமைதி காப்பதெல்லாம் ரொம்ப ஓவர். மேலும் பல காட்சிகளும் திருப்பங்களும் யூகிக்கக்கூடியதாகவே இருப்பது பலவீனம். பல காட்சிகள் தில்வாலே, ஹம் ஆப்கே போன்ற படங்களை நினைவுபடுத்துகின்றன.
தனுஷிடமிருந்து ஜெனிலியா பிரிவது உணர்வுப்பூர்வமான காட்சி. தனது மாமனுக்கும் அவரது அடியாட்களுக்கும் பயந்து, தன்னை கடந்து போகும் தனுஷை கூப்பிட முடியாமல் ஜெனிலியா தவிக்கிறார். அத்துடன் படத்தின் இடைவேளையும் வந்துவிட, அடுத்தது என்ன? என ரசிகர்களின் இதயம் தவிக்கிறது. ஆனால் அதற்கு அடுத்த காட்சியே முந்தைய காட்சியின் அழுத்தத்தை ஒன்றுமில்லாமல் செய்து, நம்மை 'உச்' கொட்ட வைக்கிறது.
தனுஷை அழித்துவிடுவதாக மிரட்டும் 'நான் கடவுள்' ராஜேந்திரனின் எவ்விதத் தடையுமின்றி படம் முடிவை நோக்கி பயணிக்கிறது. தமிழ் படங்களுக்கே உரித்தான தோணியில் பல கதாபாத்திரங்கள் உடனுக்குடன் மாறி உணர்ச்சிப்பூர்வமான வசனங்களையும் பேசி விடுகின்றனர். இது நாடகம் பார்த்த உணர்வையே நமக்குத் தருகிறது.
பாலசுப்பிரமணியனின் ஒளிப்பதிவு குளுமை. பயணக் காட்சிகளை, குறிப்பாக நிலவொளியில் பாடும் காட்சியில், கேமிரா கவிதை எழுதுகிறது. விஜய் ஆண்டனி ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். வில்லன் பிரவேசிக்கும்போது டிரம்ஸ்களின் அலறல் காதைக் கிழிக்கிறது.
பல குறைகளுக்கு நடுவே, நிறைகளைக் காண்பது அரிது. சில நேரங்களில் அது முடியாததும் கூட! பெரிய பொருட்செலவில் படம் எடுக்கிறார்கள் என்பதற்காகவோ, பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பதற்காகவோ படம் ஓடிவிடாது. அந்த வகையில் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இன்னும் பக்குவப்படணும்.
லாஜிக்கையெல்லாம் எதிர்பார்க்காமல் சும்மா ஜாலியா குடும்பத்தோட போகணும்னு நினைக்கிறவங்க தாராளமா போயிட்டு வரலாம்!
உத்தமபுத்திரன் - மினி காமெடி சீரியல்!

வ குவாட்டர் கட்டிங் - Va Quarter Cutting

Tamil Movie - Va Quarter Cutting Review - Jhon, Kalyan, Mirchi Shiva, S.P.B. Charan, Abhinayashree, Lekha Washington, Santhanam, Nirav Shah, Pushkar-Gayathri, Pushkar-Gayathri, Antony, G.V. Prakash Kumar, Dayanidhi Azhagiri, S. Sasikanth, Pushkar-Gayathri, Pushkar-Gayathri,  Tamil Movie Actor, Actress

மாலை 6 மணிக்கு ஆரம்பித்து காலை 6 மணிக்கு முடியும் வித்தியாசமான படம். கதை, காதல், மெசேஜ் என எந்த கண்றாவியும் இல்லாத சரக்கு. ஒருவரி கதையாச்சும் வேணுமே என்ற காரணத்தால் இந்த படம் முழுக்க இழுத்துச் செல்கிற அந்த ஒரே வரி... 'ஒரு குவாட்டர் அல்லது ஒரு கட்டிங்காச்சும் அடிக்கணும் என்பது தான்'! இது தான் முழுப் படத்தின் கதை சுருக்கம்.
ஒரு ராத்திரியில் நடந்த சில விஷயங்களை ஸ்லைடுகள் போல குட்டி குட்டியாகக் காட்டும் விதமும் கோவையில் இருந்து கோயம்பேட்டுக்குள் வந்து இறங்கும் சிவா, பாலகிருஷ்ணா மீது காதலாகி அவர் படத்தை முழுக்க பார்த்துவிட்டு இறங்கும் ஓப்பனிங் சீனும் அட என்று நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆனால், படம் முழுக்கவே துண்டுத் துண்டாக இருப்பதுதான் மிகப் பெரிய பலவீனமாகிவிட்டது.
சவுதி அரேபியாவில் சரக்கு அடிக்க முடியாது என்பதற்காக அங்கே வேலை கிடைத்த சிவா, ஊருக்குப் போவதற்கு முன் ஒரு குவாட்டர் அடிக்க ஆசைப்படுகிறான். அவனுடய வருங்கால அக்கா புருஷனுடன் சரக்கு அடிக்கக் கிளம்ப, தேர்தல் சமயம் ஆனதால் சரக்கு இல்லாமல் இருக்க, வேறு வழியில்லாமல் சரக்குக் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் பயணப்பட ஆரம்பிக்கிறார்கள். போன இடத்தில் இவர்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்ள, நடுவில் இவர்கள் வீட்டில் குடியிருக்கும் பெண் தற்கொலைக்கு முயற்சிக்க, அவளையும் காப்பாற்றிக் கொண்டு க்ளைமாக்ஸ் வரையில் அலைவதுதான் படம்.
படத்தின் நாயகன் சிவா. முதல் காட்சியிலேயே தான் சீரியஸாக எதையும் செய்யப் போவதில்லை என்பதை சொல்லிவிடுகிறார். படத்தில் பல இடங்களில் அவர் அடிக்கும் ஜோக்குகள்தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக உட்கார வைக்கிறது. அவரோடு படம் நெடுக வரும் சரணும் தன்னை எவ்வளவு கேலி செய்தாலும் தாங்கும் மனிதராக நடித்திருக்கிறார். அதேபோல, காமெடி வில்லன் ஜானும் ஓகேதான். ஆனால், இவர்களின் நடிப்பெல்லாம் எடுபடாமலே போய்விடுகிறது, மனதில் ஒட்டாத காட்சிகளால்!
பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு மூன்று முறை படையெடுத்து மக்குப் பெண்ணாகக் குட்டப்படும் வேடத்தில் வரும் லேகா வாஷிங்டன் நடிப்புப் பரவாயில்லை. முதல் பாதியில் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்லும் இவர் இரண்டாம் பாதியில் சிவா, சரணுடன் சேர்ந்து சுற்றுகிறார். ஆனால் இவரது பாத்திரமும் நம்மைக் கவரத் தவறுகிறது. 
ஆங்காங்கே ஒன்லைனராக நச் நச்சென டயலாக்குகள் வந்தாலும் அதற்கான காட்சிகளில் இம்பாக்ட் இல்லாததால் வெறுப்பாகத்தான் இருக்கிறது. ஒரு குவாட்டர் அடிப்பதற்காக ஒருவன் அலைவானா? என்று யோசிப்பவர்களுக்கு இப்படத்தின் மூலம், லாஜிக், போன்ற வஸ்துக்களை தேடுபவர்கள் நிச்சயம் கடுப்பாகி கட்டிங் அடிக்கத்தான் போவார்கள். அல்லது அடித்துவிட்டு வந்தவர்களுக்கு இறங்கி போய்விடும் அபாயம் இருக்கிறது.
படம் முழுக்க ரெண்டே கால் மணி நேரம் ஒரே ஒரு இரவில் நடக்கும்படி திரைக்கதை அமைத்தது. வழக்கமாக தமிழ்ப்படங்களில் வரும் க்ளிஷே காட்சிகள் எதுவும் இல்லாமல், எந்த வித சென்ட்டிமெண்ட்டும் இல்லாமல் காமெடி என்ற ஒரே ஒரு இலக்கை நோக்கி கதை பயணிக்க வைத்தது. ஒளிப்பதிவில் ஜால வித்தை எல்லாம் செய்யாமல் நார்மலாக கதை எவ்வளவு அனுமதிக்குமோ அந்த அளவு மட்டும் லைட் ஷேடோவில் மொத்தப் படத்தையும் எடுத்தத் துணிச்சல். இந்த மூன்று விஷயங்களுக்காக இயக்குநர் தம்பதியை தாராளமாகப் பாராட்டலாம்.
ஹீரோயின் தற்கொலைக்கு முயல்வதைக்கூட காமெடியாக சொல்லி இருப்பது படத்துக்கு பிளஸ். அவருக்கு ஹீரோ உடன் காதல் ஏற்பட்டதா, இல்லையா என்பதைக் கடைசி வரை சரியாகச் சொல்லாதது ஒரு வகையில் தேவலை. டூயட் காட்சிகள் இல்லை, அப்பாடா...
படத்தைப் பார்த்து விமர்சகர்கள் படத்தில் கதை இல்லை என்று சொல்வார்கள் என இயக்குநருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அவர்களுக்கு பதிலடி கொடுப்பது மாதிரி ஒரு டயலாக் வைத்திருக்கிறார். "இதுல மெசேஜ் என்ன? ஏண்டா மெசேஜ் மெசேஜ்னு அலையறீங்க?"
உயிரைக் கொடுத்து ஒளியைக் கொடுத்திருக்கிறார் நீரவ் ஷா. காட்சிகள் எல்லாமே கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியாக இருக்கின்றன. முழுக்க இரவில் நடக்கும் கதை என்பதால் அவருடைய உழைப்பு ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கிறது. ஆனால், எதற்கு இந்த உழைப்பெல்லாம் என்ற சலிப்பு ஏற்படுகிறது. ஜீ.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசை படத்தின் மூடோடு ஒத்துப்போகிறது. ஆனால் பாட்டு எதுவும் மனதில் நிற்கவில்லை.
எழுதி இயக்கி இருக்கும் புஷ்கர்-காயத்ரி தம்பதியர், சினிமாவை வேறொரு பாணியில் அணுக முயற்சித்திருக்கிறார்கள். ஆசை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதற்கான உழைப்புப் போதவில்லை. அதனால், அசத்தல் என்று சொல்வதற்கு பதில் ஸாரி என்று சொல்ல வேண்டியதாகிவிட்டது. திரும்பும் திசையெங்கும் டாஸ்மாக் இருக்கும் தமிழகத்தில் இக்கதையினை ஏற்றுக்கொள்ள சற்று சறுக்கலாகத்தான் இருக்கிறது.
வ குவாட்டர் கட்டிங் - சுரீர்னு இல்ல....!
நடிகர்கள் 
சிவா, லேகா வாஷிங்டன், எஸ்.பி.பி.சரண், ஜான் 
இசை 
ஜீ.வி.பிரகாஷ்குமார்
இயக்கம் 
புஷ்கர்
காயத்ரி
தயாரிப்பு 
தயாநிதி அழகிரி, எஸ்.சசிகாந்த்
                                                                                                                 Tamilkoodal.com